அசாம் மாநில அரசு அதிரடி முடிவெடுத்து, இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தால் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறும் மக்கள், அசாமில் ஆதார் பெற்றுவிடுகின்றனர் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் அடையாள ஆவணங்கள் தொடர்பான பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

தேசிய மக்கள் பதிவேடு (NRC) பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கே ஆதார் வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டையை பெற்றுவிடுவதைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவன், நாகோன் போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகையைவிட அதிக ஆதார் அட்டை வைத்திருப்போர் இருப்பது மாநில அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த பிரச்சினையை சமாளிக்க அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புதிய உத்தரவு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு முதல்முறையாக விண்ணப்பித்தால், அவர்கள் பெற முடியாது. இதன்மூலம், மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போலியான ஆவணங்களை கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
எனினும், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆதார் அட்டையைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை. இந்த முடிவால் அசாம் மாநிலத்தில் ஆதார் விநியோக நடைமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது.