விருத்தாசலம்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்திற்கு பிரேமலதா வந்தார். பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை அருகே கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் அவரை மேள தாளத்துடன் வரவேற்றனர்.
அங்கிருந்து, பெண்ணாடத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் வரை தொழிலாளர்களுடன் பிரேமலதா நடந்து சென்றார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “கேப்டன் வென்ற முதல் தொகுதியான விருத்தாசலத்திற்கு நான் வரும்போது, ஒரு தாய்க்கு முதல் குழந்தை பிறந்தது போன்ற மகிழ்ச்சி உணர்வு இருக்கிறது.

2011-ல் திட்டக்குடி தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்ற வரலாறு தொடரட்டும். கேப்டனின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாட வேண்டும். தவெக மாநாட்டில் விஜயகாந்தின் புகைப்படம் கொண்ட பேனர் வைக்கப்பட்டதற்கு தேமுதிக தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
விஜய் எங்கள் வீட்டுப் பையன். விஜய் மாநாட்டு அரங்கில் கொடிக்கம்பம் விழுந்ததைக் கண்டு என் மனம் உடைந்து விட்டது. தேமுதிகவுக்கு துரோகம் இழைத்த அனைவரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இங்குள்ளவர்களில் யாரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.