இந்தியாவில் சிவில் நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு சொத்து மற்றும் மரபுரிமை தொடர்பான தகராறுகளால் தான் ஏற்படுகின்றன. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மற்றும் தலைமுறைகளுக்காக சொத்துக்களைச் சேர்த்தாலும், அதைப் பிரிப்பதில் மோதல்கள் அதிகம் வருகின்றன. இதனைத் தவிர்க்க உயில் அல்லது அறக்கட்டளை ஆகிய இரண்டில் ஒன்றை பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் பேர் மட்டுமே உயில் எழுதுகின்றனர்.

அறக்கட்டளை அமைப்பது செல்வந்தர்களிடையே பிரபலமானது. சொத்துக்கள் அறக்கட்டளையில் வைக்கப்பட்டால், நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்ல வேண்டியதில்லை. 1882ஆம் ஆண்டின் இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ், சொத்து மேலாண்மை மற்றும் வரி தொடர்பான தெளிவான விதிகள் உள்ளன. இது குடும்பங்களை தலைமுறைகள் தாண்டி திட்டமிட உதவுகிறது.
அறக்கட்டளைகள் மூலம் வாரிசுகள் எப்போது பணம் பெற வேண்டும், வணிகச் சொத்துகளை எவ்வாறு காக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். மேலும் கடன் வழங்குநர்கள் அல்லது விவாகரத்து கோரிக்கைகளிலிருந்து செல்வத்தைப் பாதுகாக்கவும் உதவும். இந்திய பில்லியனர்களின் செல்வத்தில் சுமார் 25% தற்போது அறக்கட்டளைகளில் உள்ளது.
அதே சமயம், உயில் எளிதானதும், நெகிழ்வானதுமாகும். உயில் எழுத அதிக செலவில்லாமல் விரைவாக செய்து முடிக்கலாம். பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்திலும் மாற்றலாம். குழந்தைகளுக்கான பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுப்பது, இறுதி சடங்கு விருப்பங்களைச் சொல்லி வைப்பது போன்ற விஷயங்களில் உயில் அவசியமாகிறது.
ஆனால் அறக்கட்டளையை அமைப்பதில் சட்டக் கட்டணங்கள், முத்திரை வரி மற்றும் தொடர்ந்து நிர்வகிக்கும் சிக்கல்கள் உள்ளன. தவறாக வடிவமைக்கப்பட்டால் குடும்பத் தகராறுகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும் பொதுவாக இவை தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் அறக்கட்டளையின் வருமானம், உருவாக்கியவரின் வருமானமாகவே கருதப்பட்டு வரி விதிக்கப்பட வாய்ப்பு உண்டு.
எனவே, சொத்துக்களைச் சரியாகப் பிரிக்க உயிலும் அறக்கட்டளையும் இரண்டும் தேவையான கருவிகளாகும். எந்த வழி உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் தேவைக்கேற்ப தீர்மானிக்க வேண்டும்.