இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. மாநில அமைச்சர்களின் குழு, மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த மாற்றங்கள் இறுதியாக முடிவு செய்யப்பட உள்ளன. இதுவரை 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி முறையில் இனிமேல் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே தொடரும். இதனால் வரி விதிப்பு எளிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தாண்டு தீபாவளி மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மக்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டால், சந்தையில் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் குறைந்த வரி விகிதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வணிகங்களும் எளிதில் கணக்கிடும் வகையில் இந்த மாற்றம் உதவும். வரி முறையின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
மொத்தத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்திய வரி முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு நிறைவேற்றப்பட்டால், மக்களின் நிதிசுமை குறையும்.