மனிதனுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமானது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசைகளின் வலிமையை கூட்டவும் உதவுகிறது. அந்தவகையில் புரதம் நிறைந்த உணவுகளில் மீன் சிறந்ததாக கருதப்படுகிறது.
சித்த மருத்துவர் கு. சிவராமன் கூறுவதாவது, மீன்களை பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் அவசியம் சாப்பிட வேண்டும். சைவ உணவில் பருப்பு, கீரை மூலம் புரதச்சத்தை எடுக்கும்போது, அசைவத்தில் அதற்கான முக்கிய ஆதாரம் மீன் ஆகும். எந்த வகை மீனாக இருந்தாலும் தவறாமல் சாப்பிடலாம் என அவர் வலியுறுத்துகிறார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவோர் வாரத்தில் குறைந்தது இரண்டு முறை மீன் சாப்பிட வேண்டும்.
மீன் என்பது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 சத்துக்களின் முக்கிய ஆதாரம். இவை சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மற்ற உணவுப் பொருட்களில் இச்சத்துகள் இருந்தாலும், மீனில் தான் அதிகமாக உள்ளது.
கொழுப்பு சேர்வதால் பிரச்சனை உள்ளவர்கள், மாரடைப்பு அபாயம், அடைப்பு பிரச்சனை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்த்து, மீனை சாப்பிடுவது நல்லது. மீனில் கொழுப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.
பாலூட்டும் பெண்களுக்கு மீன் அவசியம். குறிப்பாக சுரா மீனை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, குழந்தைக்கு ஆரோக்கியமான பாலை வழங்க முடியும்.
ஆனால் சிலருக்கு மீன் பொருத்தமில்லாமல் இருக்கலாம். தோல் நோய், கரப்பான், எக்ஸிமா, சொரியாசிஸ், அரிப்பு, நீர்க்கசிவு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மீனைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, அர்டிக்கரியா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், குறிப்பாக இறால் வகை மீன்களைத் தவிர்க்க வேண்டும்.
இவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வாரத்தில் இரண்டு முறை மீன் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.