கீவ்: ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்தும் தீவிரமாகும் நிலையில், உக்ரைனில் உள்ள சில தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களது திறன்களை ஆயுதத் தயாரிப்புக்கு மாற்றி வருகின்றன. ரஷ்யாவின் 2022 படையெடுப்புக்குப் பின், உக்ரைன் அரசு ஆண்டுக்கு 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது.

இதனால் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் எண்ணிக்கையோடு வளர்ந்து வருகின்றன. இதில் முன்னணியில் உள்ள ‘பயர் பாயின்ட்’ நிறுவனம், இரண்டு முக்கிய போர் தளவாடங்களை உற்பத்தி செய்கிறது. ஒன்று எப்.பி.,-1 என்ற வெடிக்கும் ட்ரோன்; இது 1,600 கி.மீ., வரை பயணிக்கும் திறன் கொண்டது. மற்றொன்று ‘பிளமிங்கோ க்ரூஸ்’ ஏவுகணை; இது 3,000 கி.மீ., தூர இலக்குகளை தாக்கக்கூடியது.
2023ல் உருவான எப்.பி.,-1 ட்ரோன்கள் மாதம் 30 என்ற இலக்கில் தயாரிக்கப்படுவதாக இருந்தது. தற்போது அது மாதம் 100 ட்ரோன்கள் வரை வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ட்ரோனும் 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பயர் பாயின்ட் நிறுவனம் தினம் ஒரு பிளமிங்கோ க்ரூஸ் ஏவுகணையை உற்பத்தி செய்கிறது. அக்டோபர் வரை, நாளொன்றுக்கு ஏழு ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனை அடைய முடியும் என நிறுவனர் இரினா டெரெக் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான வான் வழி தாக்குதல்கள், குறைந்த மனிதவளத்தாலும், வர்த்தக வளங்களும் இல்லாத நிலையில், உக்ரைனுக்கு முக்கியமான வழியாக இருக்கின்றன. எப்.பி.,-1 ட்ரோன்கள் 60 கிலோ வெடிபொருட்களை சுமக்கின்றன. கடந்த கால தாக்குதல்களில் 60 சதவீதம் இந்த ட்ரோன் மூலம் நடைபெற்று, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.