வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா மற்றும் க்ரீன்கார்டு முறையை மாற்ற உள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது நடைமுறையில் உள்ள ஹெச் 1 பி விசா மோசடி எனக் கூறினார். வெளிநாடுகளில் இருந்து பணியாளர்கள் வந்து அமெரிக்க வேலைவாய்ப்புகளை பிடித்துக்கொள்வதாகவும், இதனால் உள்ளூர் அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு முன்னுரிமையாக அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும். இதற்காக ஹெச் 1 பி விசா நடைமுறையை மாற்றப்போவதாகவும், டிரம்ப் தலைமையின் கீழ் குடியேற்றக் கொள்கை மறுவடிவமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், க்ரீன் கார்டு முறையும் மாற்றப்படும். சிறந்த திறமை கொண்டவர்களை மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக “தங்க அட்டை திட்டம்” (Gold Card Program) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் குறைந்தது 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும், மாற்றம் தேவையான நேரம் இது எனவும் லுட்னிக் குறிப்பிட்டார்.