இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை தனிப்பட்ட காரணத்திற்காக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்சே பதவியைவிட்டு ஓடிய நிலையில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற ரணில், 2024 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தார். அவற்றில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்ட குற்றச்சாட்டு, அவர் அதிபராக இருந்த போது அரசு பணத்தை தவறாகச் செலவழித்ததாகும்.

2023 செப்டம்பரில் கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற்ற ஜி-77 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ரணில், அங்கிருந்து நேரடியாக லண்டனுக்குப் புறப்பட்டார். அங்கு அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேவுக்கு வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் பட்டம் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க அவர் அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு முறைப்பயணம் அல்லாத நிகழ்வுக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதாக தகவல் வெளியானதும் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாடு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில் முன்னாள் அதிபரின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களிலும் மக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இலங்கையின் நிதி நிலைமை சரிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும் போது, முன்னாள் அதிபர் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிக்கு அரசு பணத்தை பயன்படுத்தியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் அரசியல் எதிரிகள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியினரும் ரணிலை கடுமையாகக் கண்டித்தனர்.
இந்த விவகாரத்தில் இலங்கை பொருளாதார குற்றப்பிரிவு சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதன்படி ரணில் விக்ரமசிங்கே விசாரணைக்காக சிஐடி அலுவலகத்தில் ஆஜராகியபோது, எதிர்பாராத விதமாக அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முன்னாள் அதிபர் மீது அரசு நிதி முறைகேடு குற்றச்சாட்டு உறுதியான நிலையில் நிகழ்ந்த இந்த கைது இலங்கையில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரணிலின் கைது குறித்து அடுத்தடுத்த நாட்களில் அரசியல் சூழல் எப்படி மாறும் என்பது தற்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.