சென்னை: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்தியா அதனை ஏற்காததால், இன்று முதல் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா, அமெரிக்காவுடன் பல துறைகளில் நெருங்கிய வாணிப உறவை பேணிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக எரிபொருள், ஐடி சேவைகள், முதலீடுகள் என பல துறைகளில் அமெரிக்கா முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் திடீர் வரி உயர்வு பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா உலகின் முன்னணி எரிபொருள் உற்பத்தியாளராக இருப்பதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு வரி அதிகரிப்பது, நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சுமையாக மாறும். இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் படிப்படியாக உயரக்கூடும்.
அதே நேரத்தில், அமெரிக்கா இந்தியாவின் ஐடி சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாக உள்ளது. புதிய வரி உயர்வு மற்றும் பொருளாதார அழுத்தம் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடி சேவைகளை குறைத்தால், வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் பங்குச் சந்தையும் பாதிக்கப்படும். சர்வதேச வாணிபத்தில் உருவாகும் இத்தகைய பதற்றங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்து, பங்குச் சந்தையில் விற்பனை அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். குறுகிய காலத்திலேயே சந்தை வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
இதனால், இந்தியா புதிய சந்தைகளைத் தேடுவது, டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை நாடுவது போன்ற நடவடிக்கைகளே நீண்டகால தீர்வாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.