தொடர்ச்சியாக அதிக ரத்த சர்க்கரை இருப்பது டயாபடீஸ் பிரச்சனையின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் விட்டால், அது ரத்த நாளங்கள், நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, காயங்கள் மெதுவாக ஆறுதல், சோர்வு போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். மருத்துவ சிகிச்சையுடன் கூடிய சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக அவசியமாகும்.

அதிக ரத்த சர்க்கரை ஹைப்பர்கிளைசிமியா எனப்படும் நிலையில் ஏற்படுகிறது. உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி ஆகாதபோதோ அல்லது உற்பத்தியான இன்சுலின் சரியாக செயல்படாதபோதோ, குளுக்கோஸ் செல்களில் ஆற்றலுக்காக செல்ல முடியாமல் ரத்தத்தில் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த மருந்துகள் மட்டுமின்றி, சில இயற்கை மூலிகைகளும் உதவக்கூடியவை.
வெந்தய விதைகள் உணவுக்குப் பிறகான சர்க்கரையை குறைக்க உதவுகின்றன. பாகற்காய் ஜூஸும் அதேபோல் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த, துளசி மன அழுத்தத்தால் ஏற்படும் சர்க்கரை உயர்வை தணிக்க உதவுகிறது. மேலும் கற்றாழை, கறிவேப்பிலை, மஞ்சள், இஞ்சி, வேப்பிலை போன்றவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனை அளிக்கின்றன.
ஆனால் இம்மூலிகைகள் மருந்துகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதை கவனிக்க வேண்டும். மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இயற்கை மூலிகைகள் மற்றும் மருந்து சிகிச்சை இணைந்து செயல்பட்டால், சர்க்கரையை கட்டுப்படுத்தி உடல் நலனை காக்கலாம்.