பெங்களூர்: பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நகரில் பெய்த கனமழையால், ஹென்னூர் சாலை, ஓசூர் சாலை மற்றும் மைசூர் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு 7.30 மணி வரை தொடர்ந்தது. இதன் காரணமாக, ஹென்னூர், பைரத்தி, கிருஷ்ணராஜபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலையில், வேலை முடிந்து வீடு திரும்பும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்கா, ஹோர்மா உள்ளிட்ட இடங்களில் உள்ள தாழ்வான வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால், வீடுகளில் இருந்த உடைமைகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.