சென்னை: வருமானம் வந்தவுடனே செலவுகள் அதிகரித்து விடுகின்றன என்பது இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு ஒரு எளிய தீர்வை எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா முன்வைத்துள்ளார். டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (TDS) போலவே, ஒவ்வொரு மாதமும் வருமானத்திலிருந்து கட்டாயமாக சேமிப்பு பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார். இதற்கு அவர் “சேவிங்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (SDS)” என பெயரிட்டுள்ளார்.

குப்தா தனது “10-30-50 விதி” பற்றி விளக்குகிறார். அதன்படி, 20 வயதுகளில் மாத வருமானத்தின் குறைந்தது 10% சேமிக்க வேண்டும். இந்த நிலையில் பணத்தின் அளவு முக்கியமல்ல, பழக்கம் முக்கியம் என்பதே அவரது வலியுறுத்தல். 30 வயதுகளில் 30% சேமிப்பது அவசியம், ஏனெனில் வாழ்க்கை இலக்குகள் அதிகரிக்கும் காலம் அது. 40 வயதுகளில் 50% சேமிப்பு மிகவும் அவசியமானது, ஏனெனில் அப்போது வருமானமும் அதிகரிக்கும்; அதனை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், சேமிப்பு பழக்கத்தை எளிதாக்க “ஆட்டோமேஷன்” அவசியம் என அவர் கூறுகிறார். அதாவது, SIP, RD, FD போன்ற முதலீடுகளை மாதம் தோறும் தானாக கழிக்க ஏற்பாடு செய்துவிட்டால், தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இதனால் செலவுகளையும் சேமிப்பையும் ஒரே நேரத்தில் சமநிலை செய்வது சுலபமாகும். “உங்களுக்கு பிடித்த ஹேண்ட்பேக் வாங்கவும் முடியும்; அதே நேரத்தில் உங்கள் கனவு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்காக சேமிக்கவும் முடியும்,” என்று குப்தா வலியுறுத்துகிறார்.
குப்தாவின் இந்த கருத்து, YOLO (You Only Live Once) என்ற இளைஞர்களின் பிரபலமான டிரெண்ட் மற்றும் சேமிப்பு இடையே சமநிலையை ஏற்படுத்தும் வழிமுறையாக கருதப்படுகிறது. வாழ்க்கையை அனுபவிக்கும் போதும், எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாகும் இந்த 10-30-50 விதி. இது ஒருவித பொருளாதார ஒழுக்கத்தின் வரைபடமாக திகழ்கிறது.