ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நாயகன் சர் டொனால்டு பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்க விலைக்கு ஏலம் போயுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்ற அபார சராசரியை பெற்றிருக்கும் பிராட்மேன், 1946-47 ஆஷஸ் தொடரில் இந்த பச்சை நிற தொப்பியை அணிந்திருந்தார். அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது.

கான்பெரா தேசிய அருங்காட்சியகம், ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன் இந்த தொப்பியை ரூ.2.53 கோடிக்கு வாங்கியுள்ளது. பிராட்மேனின் மொத்தம் 11 தொப்பிகளில், ஒன்பது தனியாரிடம் உள்ளன. அரசின் வசம் இருந்த இரண்டு தொப்பிகளில், இதுவும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இதனால், இந்த அரிய வரலாற்றுச் சின்னம் பொதுமக்கள் பார்வைக்கு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய கலைத்துறை அமைச்சர் டோனி பர்கே, “பிராட்மேன் அணிந்திருந்த இந்த பச்சை நிற தொப்பியை மக்கள் நேரடியாக அருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமையளிக்கும் தருணம்” என்று தெரிவித்துள்ளார். தொப்பியின் வரலாற்று முக்கியத்துவத்தால், இது உலகளவில் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிராட்மேனின் சாதனைகள் கிரிக்கெட் வரலாற்றில் அழியாதவை. அவர் பயன்படுத்திய பொருட்கள் எப்போதும் சேகரிப்பாளர்களுக்கு பெரும் மதிப்புள்ளவையாக இருந்துள்ளன. இப்போது கான்பெரா அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள இந்த தொப்பி, எதிர்கால தலைமுறைகளுக்கும் பிராட்மேனின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.