வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்த பின் பெரும்பாலானவர்களுக்கு மனதில் தோன்றும் கேள்வி, “ரீஃபண்ட் எப்போது வரும்?” என்பதே. பொதுவாக, அதிக வரி செலுத்தப்பட்டிருந்தால், அந்த தொகை வரி செலுத்துபவரின் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும். இதற்கான காலக்கெடு குறித்து வருமானவரித்துறை முன்கூட்டியே விளக்கம் அளித்துள்ளது.

வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்ட பின், வரித்துறை அந்த விவரங்களை பரிசீலித்து, ரீஃபண்ட் தொகையை செயலாக்கும். இந்த செயல்முறை 7 முதல் 21 நாட்கள் வரை எடுக்கலாம். ஆனால் பொதுவாக 4 முதல் 5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் தொகை வங்கி கணக்கில் வருவதாக கூறப்படுகிறது. இந்நேரத்தில், தாக்கல் செய்யப்பட்ட ரிட்டனை இ-வெரிஃபை செய்வது கட்டாயம். இ-வெரிஃபிகேஷன் செய்யாமல் இருந்தால் ரீஃபண்ட் தாமதமாகும்.
மேலும், வங்கி கணக்கு விவரங்களில் தவறுகள், வெரிஃபிகேஷன் செய்யப்படாத நிலை, அல்லது முரண்பாடுகள் இருந்தால் ரீஃபண்ட் தொகை வருவதில் தாமதம் ஏற்படும். எனவே தாக்கல் செய்த பின், வரித்துறை போர்டலின் மூலம் (eportal.incometax.gov.in) ரீஃபண்ட் நிலையை சோதிக்க வேண்டும். அங்கு உங்களுடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி உள்நுழைந்தால், “View Filed Returns” பகுதியில் ரீஃபண்ட் நிலையை காணலாம்.
ரீஃபண்ட் 4 முதல் 5 வாரங்களில் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தை மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில், ரிட்டனில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக வரித்துறையிலிருந்து அறிவிப்புகள் வரும். அவற்றை சரிசெய்த பிறகே தொகை கிரெடிட் செய்யப்படும். எனவே, வரி செலுத்துவோர் தங்களுடைய ITR தாக்கலின் ஒவ்வொரு நிலையையும் கவனமாக கண்காணிப்பது மிக முக்கியம்.