புதுடெல்லி: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் செலுத்தப்படும் தவணைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் விதித்த பல்வேறு வரிகளுக்குப் பதிலாக ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற புதிய வரி முறையை 2017 ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, நுகர்வோர் பொருட்களுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதில், காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
நிச்சயமற்ற வாழ்க்கை
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், காப்பீட்டுத் திட்டங்களுக்கான இந்த வரியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான இத்தகைய வரி, நம் வாழ்வின் நிச்சயமற்ற தன்மைக்கு வரி விதிப்பதற்குச் சமம். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காப்பீட்டுத் திட்டத்தில் இணைகிறார்.
அதிக சுமை
இத்தகைய காப்பீட்டுத் திட்ட பிரீமியங்களுக்கு வரி விதிப்பது மூத்த குடிமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இது தவிர சமூகத்தில் உள்ள தனி மனிதனுக்கும் இது அவசியம். எனவே, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், பரிசீலித்து உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.