கொழும்பு: அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்னும் சிலர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணி (SLLP) கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் கோஷ்டி மோதல் நிறைந்த ஸ்ரீலங்கா விடுதலை கட்சியும் (SLFP) ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதிபர் விக்ரமசிங்கேவை எஸ்.எல்.எஃப்.பி. மத்தியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார். அப்போது தங்களுடைய அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தனர். இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சே குடும்பம் எஸ்.எல்.எல்.பி. கட்சியை நடத்தி வரும் நிலையில் சுமார் 90 எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுக்க முடிவு செய்தனர். அதேவேளையில் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு இல்லை எனவும், கட்சி சார்பில் சொந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் எஸ்.எல்.எல்.பி. முடிவு செய்திருந்தது.
எஸ்.எல்.எஃப்.பி கட்சி இலங்கையின் மிகப்பெரிய 2-வது கட்சியாக திகழ்ந்தது. யார் கட்டுப்பாட்டில் கட்சி என்ற கோஷ்டி மோதல் காரணமாக சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.