புதுடில்லி: ஜிஎஸ்டி அதிகாரிக்கு ரூ.22 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ வெளியிட்ட தகவலின்படி, பல ஆன்லைன் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை தங்களுக்கு சாதகமாக மாற்றும் நோக்கில் ராம் சேவக் சிங் மற்றும் சச்சின் குமார் குப்தா எனும் இருவரும் ஜிஎஸ்டி அதிகாரியை அணுகினர். பின்னர், ரூ.22 லட்சம் லஞ்சம் வழங்க முன்வந்தனர்.

ஆனால், நேர்மையான ஜிஎஸ்டி அதிகாரி, இந்த விவகாரத்தை ஏற்க மறுத்து உடனடியாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து சிபிஐ அமைப்பு, வழக்கமாக பின்பற்றும் முறைப்படி கையும் களவுமாக சிக்கவைக்கும் திட்டம் தீட்டியது. அதன்படி, இருவரும் லஞ்சத் தொகையை வழங்கிய தருணத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ராம் சேவக் சிங் மற்றும் சச்சின் குமார் குப்தா ஆகியோரின் இருப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பொதுவாக லஞ்சம் பெறும் அதிகாரிகள் கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை லஞ்சம் வழங்கியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது விசேஷம் என சிபிஐ தெரிவித்துள்ளது.