சென்னை: திமுக 2021 தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், பல புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமைபடுகிறார். ஆனால், நிஜத்தில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிறைவேற்ற நிலையை வெளிப்படையாக காட்டும் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு அஞ்சி வருகின்றதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட மூன்று அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோதும், வாக்குறுதி நிறைவேற்றம் பற்றிய விளக்கம் அரை நிமிடமே அளிக்கப்பட்டதாகவும், வெளியிடப்பட்ட 32 பக்க செய்திக்குறிப்பில் வெறும் 12 வரிகளே அதற்காக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எது நிறைவேற்றப்பட்டது, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, எத்தனை பேர் பயனடைந்தனர் போன்ற விவரங்களை வெளிப்படுத்தியிருக்கும் என அன்புமணி சவால் விட்டுள்ளார்.
“முதல்வர் ஸ்டாலின் சுற்றியுள்ளவர்கள் சொல்வதை உண்மை என நம்பி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள்; அவர்கள் உண்மையும் பொய்யையும் பிரித்தறிவார்கள். வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.