புதுடில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த நான்கு அடுக்குகளும் குறைக்கப்பட்டு இனி இரண்டு மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 5% மற்றும் 18% என்ற இரண்டு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். ஏற்கனவே இருந்த 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது வரவிருக்கும் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

வரி குறைப்பு காரணமாக சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஹேர் ஆயில், சோப்புகள், டூத் பேஸ்ட், சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றின் வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பால், ரொட்டி, பனீர் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், புற்றுநோய் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் மீதும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவே இந்த சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள், மருத்துவத்துறை மற்றும் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், செஸ் வரி இழப்பீடு குறித்து இன்னும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40% வரி தொடரும். பான் மசாலா, சிகரெட், புகையிலைப் பொருட்கள், சில வகை கார்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தனிநபர்களுக்கான விமானங்கள் இந்த பிரிவில் அடங்கும். மறுபுறம், விவசாய இயந்திரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பாகங்கள், ஜவுளித் துறை பொருட்கள் போன்றவை 12% அல்லது 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியம் முதல் தொழில்துறை வரை பல துறைகளில் விலைக் குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.