சென்னை: தமிழ்மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டர் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய போட்டித் தேர்வில் தவறான மொழிபெயர்ப்பு இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘முடிசூடும் பெருமாள்’ என்ற சொற்றொடரை ‘The god of hair cutting’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது திட்டமிட்ட அவமதிப்பாகும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர், “தமிழின முன்னோர்களையும் தலைவர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு, வைகுண்டரை குறித்த கேள்வியிலும் பொய்யான தகவலை திணித்துள்ளது. ‘கண்ணாடி முன் நின்று உன்னை நீயே வழிபடு, நீதான் கடவுள்’ என்று தனிவழியைத் தோற்றுவித்த வைகுண்டர், சமத்துவத்தை முன்னிறுத்திய புரட்சியாளர். அவரின் வரலாற்றைத் திரித்து காட்சிப்படுத்துவது தமிழர் பண்பாட்டை அவமதிப்பதாகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய நிலத்தில் பொதுக்கிணறு அமைத்ததும், ‘துவையல் விருந்து’ வழியாக சமத்துவ விருந்தை ஏற்படுத்தியதும், சமூகத் தடைகளை முறியடித்ததும் வைகுண்டரின் பெருமை என சீமான் வலியுறுத்தினார். “இத்தகைய மகத்தான சிந்தனையாளரை திட்டமிட்டு இழிவுபடுத்தும் கேள்விகள் அரசுத்தேர்வுகளில் இடம் பெறுவது, தேர்வாணையத்தின் அலட்சியத்திற்கும் திமுக அரசின் சூழ்ச்சிக்கும் சான்றாகும்” என அவர் கூறினார்.
ஆகவே, இந்த தவறுக்காக திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழர் வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் இனி நடக்கக் கூடாது. அரசுத்தேர்வுகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.