கர்நாடகாவில் இனி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையில் நடைபெற மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் EVM-இல் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது வழக்கம். வெற்றி பெறும் இடங்களில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாகவும், தோல்வியடையும் இடங்களில் தவறுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுவது புதிதல்ல. இந்த சூழலில் சில கட்சிகள் வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் வாக்குச் சீட்டு முறையே பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டி, இந்தியாவிலும் அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்தியா, அமெரிக்காவைவிட மூன்று மடங்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த அதிக நேரமும் மனிதவளமும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், மக்களிடையே EVM இயந்திரங்கள் மீது நம்பிக்கை குறைந்து விட்டதாக அரசாங்கம் கருதியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல், “மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்காக, வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மாநில தேர்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கான சட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள உள்ளது என்றும் அவர் கூறினார்.
வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்போது வாக்குகளை எண்ணி முடிக்க கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவர். இதனால் செலவினமும் அதிகரிக்கும். எனினும், மக்கள் நம்பிக்கை பெறும் வகையில் தேர்தலை நடத்துவது முக்கியம் என்பதால் இந்த பரிந்துரையை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.