கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 180 பயணிகள் இருந்த நிலையில், விமானி தன்னுடைய திறமையால் அனைவரையும் பாதுகாப்பாக மீண்டும் கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பி கொண்டுவந்தார். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அவதியையும் ஏற்படுத்தியது.

நேற்று இரவு 11.10 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சில நேரத்திலேயே கோளாறை சந்தித்தது. உடனடியாக விமானி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டார். தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், விமானத்தை மீண்டும் கொச்சிக்கு திருப்பி தரையிறக்க தீர்மானித்தார்.
சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் பயணிகள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் அபுதாபி அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருப்பதால் கடும் சிரமத்தையும் அதிருப்தியையும் எதிர்கொண்டனர்.
சமீப காலமாக இந்திய விமான சேவைகளில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது கவலைக்குரியதாகியுள்ளது. குறிப்பாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் ஏற்படும் இத்தகைய சம்பவங்கள், பராமரிப்பு முறைகள் குறித்து கேள்விகள் எழ வைக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விமான நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.