இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களிடையே மிகப் பிரபலமாக இருக்கும் சேமிப்பு திட்டங்களில் முக்கியமானது போஸ்ட் ஆபிஸ் திட்டங்களாகும். பெரும்பாலான மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பாதுகாப்பாகவும், வட்டி வருமானத்துடனும் சேமிக்க விரும்புகிறார்கள். அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

தற்போது, இந்த திட்டத்தில் அரசு ஆண்டுக்கு 7.1% வரி விலக்கு உடன் வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும். அதில் வரும் வட்டி மற்றும் முதிர்ச்சியில் கிடைக்கும் தொகைக்கும் வரி கிடையாது. இந்த திட்டம் 15 ஆண்டுகள் “lock-in period” கொண்டது. அதாவது நடுவில் முழுத் தொகையையும் எடுக்க முடியாது. எனினும், குறைந்தது ரூ.500 முதலீடு செய்து இந்த கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஒரு மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அதனுடன் 7.1% வட்டி விகிதத்தில் சுமார் ரூ.18.18 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் ரூ.40.68 லட்சம் இருக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பு, முதலீடு பாதுகாப்பாகவும், நீண்ட காலத்தில் அதிக லாபத்தையும் தருவதாகும்.
மேலும், இந்த PPF கணக்கில் கடன் பெறும் வசதியும் உள்ளது. கணக்கைத் தொடங்கி ஒரு நிதியாண்டு முடிந்த பிறகு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறிய தொகையை எடுத்துக் கொள்ளவும் முடியும். எனவே, பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீட்டை விரும்புவோர் இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தை தவறாமல் பரிசீலிக்கலாம்.