உத்தராகண்ட் மாநிலம் பிதோரகாரில் சமீபத்தில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் முற்றிலும் முடங்கின. இதனால், ராஜஸ்தானைச் சேர்ந்த நான்கு பி.எட்., மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் சிக்கினர். முன்சியாரியில் உள்ள ஆர்.எஸ். டோலியா பி.ஜி. கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அவர்கள் நேரத்தில் செல்ல முடியாமல் கவலை அடைந்தனர்.

ஹல்ட்வானி வந்திருந்த மாணவர்கள், தேர்வு தவறினால் ஓராண்டு வீணாகிவிடும் எனப் பயந்தனர். அப்போது, மாணவர் ஓமாராம் ஜாட் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் யோசனையை முன்வைத்தார். முதலில் மோசமான வானிலை காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும், ‘ஹெரிடேஜ் ஏவியேஷன்’ நிறுவனம் அவசரமாக உதவி செய்ய சம்மதித்தது.
அதன் மூலம் நான்கு மாணவர்களும் ஹெலிகாப்டரில் முன்சியாரி பறந்து சென்று தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிந்ததும், அதே ஹெலிகாப்டரில் ஹல்ட்வானிக்கு திரும்பவும் அழைத்து வரப்பட்டனர். இதற்காக, மாணவர்கள் மொத்தமாக ரூ.10,400 கட்டணம் செலுத்தினர்.
நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் கல்வி பாதிக்கப்படும் சூழலில், இம்மாணவர்கள் எடுத்த துணிச்சலான முடிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடின சூழ்நிலைகளிலும் கல்வியை முதன்மைப்படுத்திய இவர்களின் முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.