புதுடில்லி: அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருப்பதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மீண்டும் “சுதேசி பொருட்களைப் பயன்படுத்துங்கள்” என்று வலியுறுத்தினார். மாணவர்கள் வெளிநாட்டு பிராண்டுகளை பட்டியலிட்டு, அவற்றை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அமெரிக்க பிராண்டுகள்—மெக்டொனால்ட்ஸ், பெப்சி போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவி வருகின்றன. இதேசமயம், டாபர் நிறுவனம் கோல்கேட் நிறுவனத்தை மறைமுகமாக குறிவைத்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில், “அங்கு பிறந்தது இங்கு அல்ல” என்ற வாசகத்துடன், அமெரிக்கக் கொடியின் நிறங்களை பயன்படுத்தியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய சந்தையில் கோல்கேட் 43% பங்கைக் கொண்டுள்ளது. யூனிலீவரின் பெப்சோடென்ட் இரண்டாம் இடத்தில் இருக்க, டாபர் 17% பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், இந்திய நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் தயாரிப்புகளை முன்னிறுத்தும் வகையில் போட்டியை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதில் அமுல், “மேட் இன் இந்தியா” தயாரிப்புகளை முன்னிறுத்தும் கார்ட்டூன்களை பகிர்ந்துள்ளது. ரெடிப் நிறுவனம், “இந்திய மின்னஞ்சல் சேவை” என்ற அடையாளத்துடன் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை உள்ளூரிலேயே பாதுகாக்கும் உறுதியையும் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகள் மோசமடையும் சூழலில், சுதேசி நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த விளம்பர யுத்தம், வாடிக்கையாளர்களின் மனதில் தாக்கம் செலுத்துமா என்பது காலம் சென்றே தெரியும்.