அதிர்ஷ்டம் எப்போது யாரை தேடிச் செல்லும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அபுதாபியில் வசித்து வந்த இந்தியர் சந்தீப், செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற பிக் டிக்கெட் சீரிஸ் 278இல் வெற்றி பெற்று, 15 மில்லியன் திர்ஹாம், அதாவது சுமார் ரூ.35 கோடி பரிசை பெற்றார். ஒரு சிறிய வேலையில் பணிபுரிந்து வந்த அவர், இந்த ஜாக்பாட்டின் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறினார். இந்தியா திரும்பி குடும்பத்துடன் இந்தப் பணத்தைச் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தீப், ஆகஸ்ட் 19ஆம் தேதி தனது நண்பர்கள் 20 பேருடன் சேர்ந்து 200669 என்ற எண்ணில் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். பல மாதங்களாக முயற்சி செய்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பவில்லை. ஆனால் பிக் டிக்கெட் தொகுப்பாளரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பே அவரது வாழ்க்கையை மாற்றியது. முதலில் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்த அவர், பின்னர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
வெற்றி பெற்ற பிறகு, இந்தப் பணத்தை இந்தியாவில் தனது குடும்பத்துக்காக பயன்படுத்துவதாகவும், குறிப்பாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு சிகிச்சை அளிப்பதாகவும் சந்தீப் கூறினார். மேலும், சொந்த தொழிலைத் தொடங்கும் கனவும் நிறைவேற்றப் போவதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலை செய்தாலும், குடும்பப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், இப்போது இந்தப் பரிசுத் தொகை அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளேன்” என்று கல்ஃப் நியூஸிடம் சந்தீப் பகிர்ந்துள்ளார். முயற்சி செய்தால் ஒருநாள் வெற்றி நிச்சயம் கிடைக்கும் எனவும், தங்களின் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க முயல்கின்றவர்களுக்கு அவர் ஊக்கமளிக்கும் செய்தியையும் தெரிவித்தார். இந்த வெற்றி, அவரது குடும்பத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.