சிவகங்கை: நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான கருணாஸ், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது கொங்கு மண்டல மக்களின் கோபத்தை தூண்டிவிட்டதாகவும், அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எந்தவிதத்திலும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். 2000 ரூபாய் கொடுத்தாலும் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனக் கடுமையாக கூறினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து 15,516 கோடி முதலீட்டை ஈர்த்து, 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதை பாராட்டிய கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நன்றியைத் தெரிவித்தார். மேலும், பாஜக-அதிமுக கூட்டணி தமிழர் விரோத முகத்திரையை வெளிக்கொணரும் வகையில் 400 பக்க புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும், அதை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அறிவித்தார்.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், சுயநலத்திற்காக கட்சியை படுகுழியில் தள்ளுகிறார் என்றார். நான் அதிமுகவிலிருந்து வெற்றி பெற்றாலும் மீண்டும் அந்தக் கட்சிக்குள் செல்ல மாட்டேன்; உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது என்று அவர் வலியுறுத்தினார். திமுகவுக்கு கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ததுபோல அடுத்த 2026 தேர்தலிலும் பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும், வாய்ப்பு அளித்தால் எந்தத் தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிடுவேன் எனக் கூறிய கருணாஸ், விஜய் கட்சி ஆரம்பித்தது அவரின் உரிமை என்றார். ஆனால் பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் மட்டுமே அரசியல் நடத்த முடியாது என்றும் எச்சரித்தார். எடப்பாடி மீது தன்னுடைய எதிர்ப்பு தொடரும் என்றும், அவரிடம் நன்றி, விசுவாசம், உண்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.