சென்னை: அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். ஆனால், அவர் ஆதரவாளர்களில் சிலர் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பண்ணாரி, இன்று ஏ.கே. செல்வராஜ்ஜை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கே முழு ஆதரவு தருவதாக அறிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அத்திக்கடவு – அவினாசி திட்ட விழாவில் எடப்பாடி பழனிசாமியின் மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை என்பதால் செங்கோட்டையன் புறக்கணித்தார். அப்போதே தொடங்கிய பனிப்போர் தொடர்ந்த நிலையில், கடந்த வாரம் செங்கோட்டையன் 10 நாட்களில் அதிமுகவில் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என எச்சரித்தார். அதற்கு மறுநாளே எடப்பாடி பழனிசாமி அதிரடியாக செங்கோட்டையனின் அனைத்து கட்சி பொறுப்புகளையும் பறித்தார். இதையடுத்து ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானது.
இதற்கிடையே, செங்கோட்டையன் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டாலும், ஹரித்வாருக்கு ராமரை வழிபடச் சென்றேன், யாரையும் சந்திக்கவில்லை எனக் கூறினார். அதேசமயம், ஓ.பன்னீர் செல்வமும் சசிகலாவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசியதால், அதிமுக உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆனால், இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளராக கருதப்பட்ட பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கே நாங்கள் துணைநிற்கிறோம் என அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தாலும், அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு அவருக்கு கடுமையான அதிர்ச்சியாக அமைந்துள்ளது.