கோழிக்கோடு: மூளையை உண்ணும் அமீபா தொற்று கேரளாவில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது. மாசுபட்ட நீரில் உள்ள அமீபா மூலம் இந்த தொற்று பரவுகிறது. மலப்புரம் மாவட்டம் வந்தூரைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் திங்கள்கிழமை இந்த தொற்றுநோயால் இறந்தார்.
இதற்கிடையில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாஜி (47) நேற்று இறந்தார். இதன் மூலம், இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் செம்பிராவைச் சேர்ந்த ஷாஜி ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வைரஸ் எப்படிப் பரவியது என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் பத்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜூலை முதல் கேரளாவில் மூளைக் காய்ச்சல் பெருமளவில் பரவி வருவதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் வடக்கு மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் குளோரின் சேர்ப்பது உட்பட கிருமி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர்.