வாரணாசி: மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கடந்த 9-ம் தேதி முதல் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று, பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பிரார்த்தனை செய்யச் சென்றார்.
அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில், பொதுமக்கள் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். மேலும், வழி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்ற மொரிஷியஸ் பிரதமரை, அங்குள்ள மக்கள் ஹர ஹர மகாதேவ் என்ற கோஷங்களுடன் வரவேற்றனர்.

பின்னர், அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் தனது மனைவி வீணாவுடன் அயோத்தி சென்றார். அவரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
பின்னர், ராம்கூலம் சுவாமி ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். இருவரும் அங்கு நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தனர். மொரீஷியஸ் பிரதமருடன் 30 பேர் கொண்ட குழுவும் சென்றது.