வயநாடு: தனது தந்தை ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது உணர்ந்த அதே உணர்வுகளை தானும் அனுபவித்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகவும் சோகமான சம்பவம்.
நிலச்சரிவில் எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன? அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது.
கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தருவோம். இது போன்ற ஒரு துயர சம்பவத்தை கேரளா இதுவரை பார்த்ததில்லை. இந்த பிரச்னையை மத்திய, மாநில அரசுகளிடம் எழுப்புவோம். இந்த பயங்கரமான பேரிடரை வேறு வழியில் கையாள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஒரே பகுதியில் குடியமர்த்தக் கூடாது.
அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை மாநில அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.