பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் முசாபர்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகாரில் உள்ள அனைத்து 243 தொகுதிகளிலும் ஆர்.ஜே.டி தனித்து போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், ஜேடியு–பாஜக கூட்டணியை எதிர்கொள்ள மகாபந்தன் கூட்டணியாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல கட்சிகள் இணைந்திருந்தாலும், தொகுதி பங்கீடு தொடர்பான சிக்கல்கள் தீவிரமாக உள்ளன. இதனால், தேஜஸ்வியின் அறிவிப்பு தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
தேஜஸ்வி தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்ததோடு, தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் சாதனைகளையும் எடுத்துக்கூறினார். “நாங்கள் மீண்டும் வருவோம், பீகாரின் அனைத்து தொகுதிகளிலும் ஆர்.ஜே.டி போட்டியிடும்,” என்று அவர் உறுதியளித்தார். மேலும், தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்குத் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அவரின் இந்த அறிவிப்பு, காங்கிரஸுடன் உள்ள பேச்சுவார்த்தையில் பேரம் பேசும் உத்தியாக இருக்கலாம் என்றும், அல்லது உண்மையில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிடும் முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதுவாக இருந்தாலும், பீகார் அரசியலில் தேஜஸ்வியின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.