பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி அண்மையில் பதவி விலகியதால், அந்தப் பதவி தற்போது காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதோடு துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகப் பொறுப்புக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பெயரை பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கம் பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வரும் அவர், நிர்வாக அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

இதற்கிடையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களின் வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் செயலாளர் ஆர்.ஐ. பழனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அதை சச்சின் தரப்பில் முற்றிலும் மறுத்துவிட்டனர். எனவே, அடுத்த தலைவராக யார் பதவி ஏற்கிறார் என்பது செப்டம்பர் மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குப் பின் தெளிவாகும்.