அமெரிக்காவின் டல்லாஸில், கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சந்திரமௌலி நாகமல்லையா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான அவர், டவுன்டவுன் சூட்ஸ் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிய ஒருவரால் கோடரியால் கழுத்தறுக்கப்பட்டு அவரது மனைவி, மகன் முன்னிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். குற்றவாளி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தும் பைடன் ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இத்தகைய சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இடம்பிடிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம். என் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது. இந்த வழக்கில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் காவலில் உள்ள அவனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
இந்தியர் மீதான தாக்குதல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. குடியேற்றக் கொள்கை தொடர்பான அரசியல் வாக்குவாதங்களும் அதிகரித்துள்ளன. சந்திரமௌலி நாகமல்லையாவின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.