புதுடில்லி: இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் இன்ஜினியர்கள் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளில், அவர்களின் படைப்பாற்றல், கடின உழைப்பு, மற்றும் தாராளமான பங்களிப்பு தேசத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று இன்ஜினியர்கள் தினத்தை முன்னிட்டு, சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் சிறப்பான பங்களிப்பை மோடி தனது எக்ஸ் பதிவில் நினைவுகூர்ந்தார். இந்தியாவின் இன்ஜினியரிங் துறைக்கு அவர் விட்டுச் சென்ற மரபு அழியாதது என்றும், அந்நாளை கொண்டாடுவது ஒவ்வொரு இன்ஜினியருக்கும் ஊக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
நாட்டின் பல்வேறு துறைகளில் புதுமையான சிந்தனை மற்றும் தீர்மானத்தால் சவால்களை சமாளித்து வரும் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொழில்நுட்ப மேம்பாடு, அடிப்படை வசதி வளர்ச்சி, மற்றும் தொழில் முனைவோர் முயற்சிகளின் வெற்றிக்கு இன்ஜினியர்கள் தங்களின் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் கூட்டுப்பணிகளில், இன்ஜினியர்களின் பங்களிப்பு எதிர்கால வளர்ச்சியின் அடித்தளமாக அமையும் என பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர்களின் கைவண்ணம் பிரதிபலிக்கிறது என்பதை அவர் நினைவுபடுத்தினார்.