துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போதும் பிரபலம்தான். ஆனால், இந்த முறை போட்டி முடிந்த பிறகு கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள் செய்தியால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் போட்டிக்குப் பிந்தைய வாழ்த்துக்களை பரிமாறாமல், நேராக மைதானத்தை விட்டு வெளியேறிய இந்திய வீரர்கள், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சூழ்நிலையை நினைவுபடுத்தி, இந்திய வீரர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் சூர்யகுமார் பேசியபோது, “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் நம் வீரர்களுக்குமான மரியாதையாக இந்த வெற்றியை ராணுவத்திற்கே சமர்ப்பிக்கிறோம்” என்றார். இதனால், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்திய வீரர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.
போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க காத்திருந்தபோதும், இந்திய அணி முழுமையாகத் தவிர்த்து ஓய்வறைக்குச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விளையாட்டில் மரியாதையான நடைமுறையாகக் கருதப்படும் கை குலுக்கலை மறுத்தது, இப்போதைய சூழ்நிலையில் இந்திய வீரர்களின் கடுமையான நிலைப்பாட்டைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பரிசளிப்பு விழாவையும் புறக்கணித்தார். இருந்தாலும், இந்திய வீரர்களின் தீர்மானத்தை மக்கள் வரவேற்றுள்ளனர். “விளையாடினாலும் சமரசமில்லை” என்ற மனநிலையை வெளிப்படுத்திய இந்த செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.