உலகம் முழுவதும் பயங்கரவாதத்தின் முகமாக அறியப்பட்ட அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன், 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்க கடற்படை சீல்ஸ் நடத்திய நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகையே உலுக்கியதோடு, பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உட்படுத்தியது. அவரின் மறைவிடத்திலிருந்து வெறும் கல் எறியும் தூரத்தில் இராணுவம் இருந்தபோதும், பின்லேடன் பல ஆண்டுகள் அங்கே வசித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப் பெரிய கேள்வியாக எழுந்தது, பின்லேடனின் குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதாகும். இந்த கேள்விக்கான பதில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஃபர்ஹத்துல்லா பாபர் எழுதிய “தி சர்தாரி பிரசிடென்சி: நவ் இட் மஸ்ட் பி டோல்ட்” என்ற புத்தகத்தில், பின்லேடன் கொல்லப்பட்ட பின் அவரது மனைவிகள் சந்தித்த நிலைமை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அவரது குறிப்பின்படி, பின்லேடன் கொல்லப்பட்ட உடனேயே பாகிஸ்தான் அதிகாரிகள் அவரது மனைவிகளை காவலில் எடுத்தனர். சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகள் அங்கே வந்து விசாரணை நடத்தியது. இது பாகிஸ்தானின் இறையாண்மையைப் பற்றிய கடும் விமர்சனங்களை எழுப்பியது. பின்லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் இருந்தனர், ஆனால் அவர் இருவரை விவாகரத்து செய்திருந்தார். 2011-ல் அவர் கொல்லப்பட்டபோது மூன்று மனைவிகளும், பல குழந்தைகளும் அபோதாபாத்தில் அவருடன் வசித்து வந்தனர்.
மேலும், பின்லேடன் மறைவிடம் குறித்த தகவல்களை சிஐஏ ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே சேகரித்து வைத்திருந்ததாகவும், அந்த வளாகத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் விவரங்களையும் அறிந்திருந்ததாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்லேடன் கொலைக்குப் பிறகு அவரது மனைவிகள் எவ்வாறு கையாளப்பட்டார்கள் என்ற கேள்விக்கு இந்த புத்தகத்தில் விடை கிடைக்கப்பெற்றுள்ளது