சென்னை அரசியல் சூழல் பாமக உள்கட்சி மோதலால் பரபரப்பாகியுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைமையை அங்கீகரித்து மாம்பழ சின்னத்தையும் பாமக அலுவலகத்தையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் இருக்க, ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாமக எம்.எல்.ஏ அருள், “இந்தக் கடிதம் பாமக என்ற பெயரில் வந்தது. ஆனால் அன்புமணி தரப்பின் முகவரி மாற்றிய திருட்டுத்தனத்தால் அது அவர்களிடம் சென்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகும் நிலையில் பாமக குழப்பம் அதிகரித்துள்ளது. அன்புமணி தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களுக்கே பாமக சின்னத்திலும் கொடிக்கும் உரிமை உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இதனால் அன்புமணி பாமகவை முன்னிலை வகிக்கப்போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ராமதாஸ் ஆதரவாளர்கள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். “பாமகவை உருவாக்கிய தலைவர் ராமதாஸ். 46 ஆண்டுகளாக உழைத்த கட்சியை அவரிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. வன்னியர் சமூக மக்கள் இன்று வரை ராமதாஸ் பின்னால்தான் உள்ளனர். அன்புமணி கட்சியை விட்டு வெளியேறி விட்டார். புதிய கட்சி வேண்டுமானால் தொடங்கிக் கொள்ளலாம், ஆனால் பாமக ராமதாஸுக்கே சொந்தம்” என அருள் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு அன்புமணிக்கு பலம் சேர்த்திருப்பினும், ராமதாஸ் தரப்பினர் அதனை எதிர்த்து போராடத் தயாராக உள்ளனர். பாமக சின்னம் மற்றும் அதிகாரம் தொடர்பான இந்த மோதல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்காற்றப்போவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான இந்த மோதல், அப்பா-மகன் அரசியல் போராட்டமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.