சென்னை: ஸ்ரீராமர் மீது திமுகவின் திடீர் பற்று என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள், குளங்கள், சிற்பங்கள் உள்ளன என்றும், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறினார்.
மேலும், ராமர் என்ற நபருக்கு சரித்திரம் இல்லை என்று கூறிய சிவசங்கர், இந்த மண்ணில் பிறந்தவர்களை கொண்டாடாவிட்டால் தலைக்கு சம்மந்தம் இல்லாதவர்களை தூக்கிலிடுவார்கள் என்றும் கூறினார். அவர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்ரீராமர் மீது தி.மு.க.வுக்கு திடீர் பற்று இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, திமுக அமைச்சர் ரகுபதி, ஸ்ரீராமர் சமூக நீதியின் போர்வீரர் என்றும், அனைவருக்கும் சமத்துவத்தை போதித்தவர் என்றும் கூறினார்.
ஆனால் தற்போது ஊழல் அமைச்சர் சிவசங்கர் ராமர் இல்லை என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. சோழர்களின் செங்கோலைப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஏற்றியபோது அதை எதிர்த்தது தி.மு.க.
சிவசங்கர், ராமர் வரலாற்றை அமைச்சர் ரகுபதியிடம் கேட்க வேண்டும். அமைச்சர்கள் இருவரும் ஆலோசனை செய்து ராமர் குறித்து தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இதன் மூலம் சிவசங்கர் பகவான் ஸ்ரீராமனிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.