சென்னை: தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 புதிய தொழிற் பேட்டைகளை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரி ராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது.
இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 400 நபர்கள் நேரடியாகவும், 800 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 91 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது.
இத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 24.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.58 கோடி மதிப்பீட்டில் 34 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.