சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகியிருந்த ஜாய் கிரிஸில்டா, செய்தியாளர்களிடம் உருக்கமான பேட்டியளித்தார். தன்னுடைய குழந்தைக்காக தான் போராடி வருவதாகவும், அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் செல்வேன் எனவும் அவர் கண்கலங்க கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகவும், அவற்றை நீக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அவர் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்துக்கு தன் பேச்சால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அதை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து வெளியே வந்த ஜாய் கிரிஸில்டா, “நான் எந்த தவறான தகவலையும் பரப்பவில்லை. என் குழந்தைக்காக மட்டுமே போராடிக்கொண்டு இருக்கிறேன். பணம் இருந்தாலே தவறு செய்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு நான் எதிராக நிற்கிறேன்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும், “20 நாட்களுக்கு முன் நான் புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் நிலையங்கள் வழக்கை தள்ளிக்கொண்டே செல்கின்றன. இப்போது என் வழக்கு எங்கு இருக்கிறது என்பதே எனக்குத் தெரியவில்லை. எனது வயிற்றில் வளரும் குழந்தைக்காக நீதியைத் தேடுகிறேன். ஆனால், சமூகம் என்னை அவமானப்படுத்தி பேசுகிறது. தவறு செய்தவர்கள் சுதந்திரமாக இருக்க, தவறை வெளிப்படுத்திய நான் குற்றவாளியாக்கப்படுகிறேன்” என வேதனையுடன் உரைத்தார்.
பல யூடியூப் சேனல்களில் தன்னைப்பற்றி தவறாக பேசப்படுவதாகவும், பெண்கள் மீது குற்றம்சாட்டும் சமூகத்தையே அவர் கண்டித்தார். “அவமானப்படுத்தப்படும் பெண்கள் துணிந்து உண்மையை வெளியிடத் தயங்குகிறார்கள். ஆனால், என் குழந்தைக்காக நான் எதையும் சகித்துக்கொண்டு போராடுவேன்” என்று கண்ணீர் மல்க உரையாற்றினார். இந்த உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.