சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக வெற்றக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறும் போது பொது சொத்துக்கள் சேதமடைந்தால், முழு இழப்பீட்டையும் தவெக கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சட்டத்தின் கீழ் மட்டுமே பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், தவெக தொண்டர்கள் கடந்த காலங்களில் செய்த அத்துமீறல்களை குறிப்பிட்டார். குறிப்பாக, கட்அவுட் மேல் ஏறிய புகைப்படங்கள் மற்றும் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இதனால், “பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது, தலைவராக இருக்கும் நீங்கள் தானே கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என விஜய்க்கு நீதிமன்றம் நேரடியாக அறிவுறுத்தியது.
அதேவேளை, காவல்துறையினரால் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளை தவெக தரப்பு எதிர்த்து வாதாடியது. கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என்ற நிபந்தனை யதார்த்தமற்றது என்றும், இது எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், நீதிமன்றம் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமை இருக்கலாம், ஆனால் அது சட்டத்திற்குள் மட்டுமே சாத்தியம் என வலியுறுத்தியது.
கடந்த சில காலங்களில் தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசங்கள் பொதுமக்களை பாதித்ததாகவும், அதனால் தான் இந்தக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ரசிகர்கள் கூட்டம் அரசியல் வலிமையாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்தாலும், நீதிமன்றம் சட்ட ஒழுங்கே முதன்மை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.