விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களில் உள்ளபடி அலுவலகம், வாகனம் உள்ளிட்ட வசதிகளை வழங்காமல் இருப்பது எம்.பிக்களின் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டம் தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டார். கடந்த ஆண்டு ரூ.10,744 கோடி ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைவான வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டதால் சுமார் ரூ.5,000 கோடி ஊதிய இழப்பு ஏழை மக்களுக்கு ஏற்படும் என்று கூறினார். எனவே, கூடுதல் வேலை நாள்களை உறுதி செய்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், பஞ்சமி நிலங்கள் மீட்பு, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் கூட்டு திட்டங்கள் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஜல் ஜீவன் திட்ட நிதி ஒதுக்கப்படாததால், பல கிராமங்களில் குடிநீர் திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், சுமார் 1,565 கிராம மக்களுக்கு நிவாரணம் தேவை என்றும் அவர் கூறினார்.
இதனுடன், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகளை உயர்த்த வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசு எம்.பிக்களுக்கு அலுவலக வசதி, வாகன வசதி செய்து கொடுத்தால், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.