
வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் நடந்த இந்த பிரச்சனை, ஆயிரக்கணக்கான பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததால் விமான போக்குவரத்து கட்டுப்பாடு முற்றிலும் முடங்கியது.

தகவல் தொடர்பு சிக்னல்கள் துண்டிக்கப்பட்டதால் ராடார் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் சரியாக இயங்கவில்லை. இதன் விளைவாக 1800க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை பாதிப்புக்குள்ளானது. இதில் சுமார் 200 விமானங்கள் நேரடியாக ரத்து செய்யப்பட்டன. மேலும் 500க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 700க்கும் மேற்பட்ட விமானங்களின் அட்டவணை மாற்றப்பட்டதால் பயணிகள் குழப்பமடைந்தனர்.
டல்லாஸ் நகரம் வழியாக செல்லும் உள் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகள், “சேவைகளை விரைவாக சீரமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் முக்கியமானதாகக் கருதப்படும் டல்லாஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு, அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இப்படிப்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.