சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார். சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு அவர் டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பாஜக கூட்டணியில் புதிய கட்சி சேரும் முயற்சியோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசிக்க நயினார் செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் பாமக அல்லது தேமுதிக சேருமா என்பது குறித்து அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பாமக உள்கட்சி பிரச்சினையில் சிக்கியுள்ளதால் உறுதி இல்லை, அதே நேரத்தில் தேமுதிக தரப்பில் குழப்பமான நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இந்த சூழலில் எந்தக் கட்சி இணையும் என்பதை நட்டா – நயினார் சந்திப்பு தெளிவுபடுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் ஒருங்கிணைந்த நிலையை வலியுறுத்தி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அமித்ஷா சந்திப்பு கூடுதல் அரசியல் யூகங்களை கிளப்பியுள்ளது. இதனால் பாஜக – அதிமுக இடையேயான உறவு மேலும் வலுப்படுமா அல்லது கூட்டணியில் புதிய சக்தி உருவாகுமா என்பது ஆவலாகக் காத்திருக்கப்படும் கேள்வியாக மாறியுள்ளது.
நாம் தமிழர் கட்சியும், தவெகவும் தனித்துப் போட்டி நிலைப்பாட்டைத் தக்க வைத்திருப்பதால் அவர்கள் பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. எனவே பாமக, தேமுதிக அல்லது தினகரன் – ஓபிஎஸ் இணைவு மட்டுமே சாத்தியம் என வட்டாரங்கள் கூறுகின்றன. எதுவாக இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்கில் பெரிய மாற்றங்கள் நிகழப்போவதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.