சென்னை: நில உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களில் பட்டா, சிட்டா இரண்டும் முக்கிய பங்காற்றுகின்றன. பத்திரப்பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்தச் சொத்து உண்மையில் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் தான் பட்டா. அதன் விரிவான பகுதியே சிட்டா ஆவணம் எனப்படுகிறது. பலர் சிட்டாவின் அவசியத்தை உணராமல் புறக்கணிப்பதால் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.

சிட்டாவில், நில உரிமையாளர் பெயர், நிலம் புஞ்சையா நஞ்சையா, அதன் பரப்பளவு, பயன்பாடு, மாவட்டம், கிராமம் போன்ற கூடுதல் விவரங்கள் இடம்பெறும். வங்கி கடன் பெறும்போது, நிலம் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும்போது, அரசின் இழப்பீடு பெறும்போது, நிலத்தை விற்பனை செய்யும்போது ஆகிய சூழல்களில் பட்டாவுடன் சிட்டாவும் கட்டாயமாக தேவைப்படும்.
சமீபத்தில், நில உரிமைக்கான ஆவணங்களை எளிதாகப் பெற அரசு ஆன்லைன் வசதிகளை உருவாக்கியுள்ளது. கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் நிலங்கள் அனைத்திற்கும் https://tamilnilam.tn.gov.in மற்றும் https://eservices.tn.gov.in மூலம் பட்டா, சிட்டா, “அ” பதிவேடு, புலப்படம் போன்றவற்றை எங்கிருந்தும் எந்நேரமும் பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் நிலஅளவை வரைபடங்கள், பழைய எண்களுக்கு புதிய எண்கள் ஒப்புமை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், பட்டா – சிட்டா ஆவணங்களை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி கிடைத்துள்ளது. நில உரிமையை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தவும், உரிமை தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கவும், பொதுமக்கள் ஆன்லைன் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.