புதுடில்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது விழாவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய கௌரவமான தாதா சாகேப் பால்கே விருது ஜனாதிபதி திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது. 1954ம் ஆண்டு தொடங்கி, இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தலைநகர் டில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நடிகருக்கான விருது, டுவெல்த் பெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸேக்கும், ஜவான் படத்திற்காக பாலிவுட் கிங் ஷாருக் கானுக்கும் வழங்கப்பட்டது. 33 ஆண்டுகளாக சினிமாவில் செயல்பட்டு வரும் ஷாருக் கானுக்கு இது முதல்முறை தேசிய விருது கிடைத்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதேசமயம், சிறந்த நடிகைக்கான விருது மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்திற்காக ராணி முகர்ஜிக்கு கிடைத்தது.
தமிழ் திரைப்படத் துறையிலும் பெருமை சேர்க்கும் வகையில், பார்க்கிங் படம் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றது. அந்த படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வாத்தி படத்திற்காக தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார். இதற்கு முன் சூரரைப்போற்று படத்திற்காக அவர் விருது பெற்றிருந்தார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது மலையாள படமான உள்ளொழுக்கு படத்தில் நடித்த ஊர்வசிக்கு கிடைத்தது. தி கேரளா ஸ்டோரி படத்திற்காக பிரசந்தனு மொஹபத்ரா சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டார். மொத்தத்தில், தென்னிந்திய சினிமாவும், பாலிவுட்டும் இணைந்து தேசிய விருதுகளில் சிறப்பாகத் திகழ்ந்தன.