துபாயில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மேற்கொண்ட செயல்கள் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததை காரணமாக காட்டி பாகிஸ்தான் அணி செய்த செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், கட்டாய பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்ததற்காக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததால் பிசிபி போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை குற்றமாக கூறி ஐசிசியிடம் புகார் அளித்தது. ஐசிசி அந்த புகாரை நிராகரித்த போதிலும், பிசிபி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, UAE அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என மிரட்டி, போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியது.
கவாஸ்கர் தனது கட்டுரையில், கிரிக்கெட் விதிகளில் கைகுலுக்கல் கட்டாயமில்லை என்பதையும், பல விளையாட்டுகளில் போட்டிக்குப் பிறகு கைகுலுக்காத சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் அணி கட்டாய பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்தது, போட்டியை தாமதப்படுத்தியது ஆகியவற்றும் சரியானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்டுரையின் முடிவில் கவாஸ்கர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், போட்டியை நிராகரித்த அல்லது தாமதப்படுத்திய செயல்கள் விளையாட்டு உணர்வுக்கு எதிரானவை என வெளுத்து காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இப்படிப் பாதிப்புகளை தவிர்க்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.