நொய்டா நகரில் உத்தரபிரதேச அரசு சார்பில் நடத்தப்படும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சுமார் 1.25 லட்சம் வணிகர்கள் மற்றும் 4.50 லட்சம் பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிடவுள்ளனர். இத்தகைய விழா, வணிகம் மற்றும் முதலீட்டுக்கு மட்டும் அல்லாமல், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு சர்வதேச அளவில் தொடர்புகளை உருவாக்கும் ஒரு வாய்ப்பாகும்.

இந்த முறை கண்காட்சியில் ரஷ்யா சிறப்பு பங்கேற்பு நாடாக இருக்கிறது. நாளை நடைபெறவுள்ள இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, உத்தரபிரதேசத்தில் புதிய தொழில்நுட்ப வணிகங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான பாதையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி, கண்காட்சியில் பங்கேற்ற தொழில் முனைவோர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அவருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப்பரிசு அளித்தார். இந்தக் கண்காட்சி வர்த்தக வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக கருதப்படுகிறது.