குழந்தை பிறந்து 6 வாரங்களிலிருந்து 19 அல்லது 20 மாதங்கள் வரை தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இந்த தடுப்பூசிகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எதிர்காலத்தில் ஆபத்தான தொற்றுகளிலிருந்து அவர்களை பாதுகாக்கின்றன. போலியோ, டைஃபாய்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு கவசமாக தடுப்பூசி செயல்படுகிறது.

ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு சில நேரங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்படலாம். இது உடல் நோய் எதிர்ப்பு மண்டலம் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் இயல்பான விளைவாகும். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வராமல் போகலாம்; அதுவும் சாதாரணம். எனவே பெற்றோர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தையின் உடல் தன்மை, எதிர்ப்புத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறான மாற்றங்கள் இருக்கும்.
மருத்துவர் சாகுல் கூறுவதாவது, தடுப்பூசி போட்ட உடனே குறைந்தது அரை மணி நேரம் மருத்துவமனையிலேயே தங்கி, குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை உண்டானதா என்பதை கவனிக்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஊசி போட்ட இடத்தில் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுப்பது அவசியம். ஐஸ் கட்டியை நேரடியாக தடவாமல், ஒரு துணியில் சுருட்டி 5–10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் இருமுறை இவ்வாறு செய்தால் குழந்தைக்கு வலி குறையும், வீக்கம் தணியும். மறுநாளும் வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் தரலாம்.
மேலும், குழந்தைகள் தடுப்பூசி போட்ட பிறகு சோர்வடைந்து அழுவார்கள். அப்போது அவர்களுக்கு பாராசிட்டமால் மருந்து கொடுப்பது அவசியம் என்கிறார் மருத்துவர். மருத்துவர் பரிந்துரைத்த அளவிலேயே மருந்து கொடுக்க வேண்டும். காய்ச்சல் அதிகரித்தால், குழந்தை ஆக்டிவாக இல்லாமல் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தால் அல்லது வீக்கம் மிகுந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். பெற்றோர் இந்த எளிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றினால், குழந்தைகள் தடுப்பூசி பக்கவிளைவுகளை எளிதில் சமாளித்து ஆரோக்கியமாக வளர்ந்து விடுவார்கள்.